நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்து செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

நாட்டின் அப்பாவி ஏழை மக்களே இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிக்கவும் அதனை தடுப்பதற்கும் அதேபோன்று சிறுநீரக நோயாளர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக கடந்த மூன்றரை வருட காலத்தில் அரசாங்கத்தினால் விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளிலிருந்து பெறப்பட்ட சுத்தமான குடிநீரை புனித ஜயசிறி மகாபோதிக்கு அபிஷேகம் செய்தல் மற்றும் 500ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி , 2016ஆம் ஆண்டில் 3372 சிறுநீரக நோயாளர்கள் புதிதாக கண்டறியப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டில் 2478 நோயாளர்களும் 2018ஆம் ஆண்டில் இதுவரை 1500 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கமைய புதிய சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது என தெரிவித்தார். 

தான் பொது வேட்பாளராக போட்டியிட்டபோது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கிடைக்கப்பெற்ற நிதியை வைப்பிலிட்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுநீரக நிதியம் இன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவானதொரு தேசிய நிதியமாக காணப்படுகின்றதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

அந்நிதியத்தினூடாக சிறுநீரக நோயாளர்களுக்கான பரந்தளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அத்திட்டங்களுடன் இணைந்துகொண்டுள்ள அரச துறையினர், தனியார் துறையினர், வர்த்தக துறையினர் மற்றும் சர்வதேசத்தினருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார். 

அத்துடன் நாட்டின் அப்பாவி ஏழை மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த மோசமான நிலையிலிருந்து அவர்களை பூரணமாக விடுவிப்பதற்காக அவ்வனைத்து தரப்பினரதும் உதவிகளை தான்  எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

சிறுநீரக நோய் எச்சரிக்கையுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை கடற்படையினரால் இதுவரை 500 நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 

உரிய நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணப் பணிகளுக்காக சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியினால் இதுவரை 800 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதனூடாக நாட்பட்ட சிறுநீரக நோய் வியாபித்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் நாளாந்தம் 50 மில்லியன் லீற்றர் சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். 

இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதி அனுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை குருந்தன் குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை நேற்று தொலைதூர தொழில்நுட்பத்தினூடாக ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார். 

இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நீர் சுத்திகரிப்பு தொகுதியிலிருந்தும் ஒரு லீற்றர் வீதம் பெற்றுக்கொள்ளப்பட்ட 500 லீற்றர் சுத்தமான குடிநீரை 100 மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி புனித ஜயசிறி மகாபோதிக்கு அபிஷேகம் செய்தார். 

இன்று  காலை அனுராதபுரத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜயசிறி மகாபோதி வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் வண பல்லேகம சிறிநிவாச நாயக்க தேரரை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். 

அதன் பின்னர் அனுராதபுரம் மிஹிந்தலை குருந்தன்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதியை தொலைதூர தொழில்நுட்பத்தினூடாக அவர் மக்களிடம் கையளித்தார். 

தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க ஜயசிறி மகாபோதி வளாகத்தில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். 

இதன் பின்னரே 500 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட புனித நீரை ஜனாதிபதி ஜயசிறி மகாபோதிக்கு அபிஷேகம் செய்தார். 

ஜேர்மனியின் பெர்லின் நகரிலுள்ள பௌத்த விகாரைக்கு கொண்டு செல்லப்படவுள்ள ஜயசிறி மகாபோதியின் அங்குரப் பகுதி வண. பல்லேகம சிறிநிவாச நாயக்க தேரரினால் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அதனை கலாநிதி வண. இத்தேபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரரிடம் கையளித்தார். 

குருந்தன்குளம் விகாரையின் விகாராதிபதி சாஸ்ரபதி வண. கல்பாத்த சுமன நாயக்க தேரரினால்  ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மல்வத்து மகா விகாரை பிரிவின் அனுநாயக்கர் வண. திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரர், அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், ருவன்வெலிசாய விகாராதிபதி வண.

பல்லேகம ஹேமரத்தன தேரர், வண. பொரதொட்ட விஸ்சபு தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, பி.ஹெரிசன், சந்ராணி பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் பெருமளவிலான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.