(எம்.எப்.எம்.பஸீர்)

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன்,  மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க,  வசீம் தாஜுதீன் விவ­கா­ரத்தை விசா­ரணை செய்யும் சி.ஐ.டி.யின்  மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகி­யோ­ருடன் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் தாக்கல் செய்து இந்த விட­யத்தை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்த  கடற்­படை வீரர்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வழங்க கடற்­படை தள­பதி  மறுப்­பா­ராயின், அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின்  173 மற்றும் 174 ஆவது அத்­தி­யா­யங்­களின் கீழ் செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இதன்­போது நீதிவான் இசுரு நெத்தி குமார சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும், சி.ஐ.டி.க்கும் ஆலோ­சனை வழங்­கினார். 

மேலும் இந்த கடற்­படை வீரர்கள் தொடர்பில் தக­வல்கள் மறைக்­கப்­ப­டு­வது தொடர்பில் அத்­த­க­வல்­க­ளுக்கு பொறுப்­பான உயர் கடற்­படை அதி­காரி ஒரு­வரை விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் எதிர்­வரும் 25 ஆம் திகதி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும்  பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இன்றைய தினம் வஸீம் தாஜுதீன்  கொலை வழக்கு விசா­ர­ணைக்கு  வந்தபோது, இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணையில் உள்ள  நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா ,  முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க , முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இதன்போது வஸீம் தாஜுதீன் படுகொலை விவ­கார விசா­ர­ணைகள் மிக நீண்­ட­கா­ல­மாக பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய நீதிவான், 

குறித்த விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நிறைவு செய்­யு­மாறும், விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வ­தற்­கான காரணம் மற்றும் தற்­போது கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான சாட்­சிகள் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் என்­ப­வற்றை உள்­ள­டக்கி விரி­வான அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கவும் உத்­த­ர­விட்­ட­துடன் வழக்கை எதிர்­வரும் நவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.