ஆசிய கிண்ணப்போட்டிகள் ஏற்பாடு செய்ப்பட்ட விதம் குறித்த குழப்பம் சீற்றம் ஏமாற்றத்திற்கு பின்னர் தற்போது சுப்பர் 4 சுற்றில் யார் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் பாக்கிஸ்தானின் பங்கு முக்கியமானது.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆப்கான் கிரிக்கெட் தனது பராமரிப்பில் எடுத்திருந்ததுடன் அதன் வளர்ச்சிக்கும் உதவியிருந்தது.

பாக்கிஸ்தானின் தேசிய  கிரிக்கெட் அக்கடமியில் ஆப்கானிஸ்தானின் பல வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

ஆப்கானிஸ்தானிற்கு எதிராக முதன்முதலில் ஒரு நாள் போட்டியில் விளையாடிய நாடும் பாக்கிஸ்தான்.

ஆரம்பகாலங்களில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஆதரவு இல்லாவிட்டால் ஆப்கான் கிரிக்கெட் இவ்வளவு தூரம் வளர்ச்சி கண்டிருக்குமா என்பது சந்தேகமே

ஆனால் காலங்களும் அரசியலும் மாற்றமடைந்தன.

பாக்கிஸ்தானிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையிலான இடை வெளி அதிகரித்தது.

கடந்த வருடம் ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற மிகமோசமான குண்டு தாக்குதல் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையிலான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போன்று இந்தியா ஆப்கானிஸ்தான் உறவுகள் வளர்ச்சி கண்டன.

தாங்கள் ஆரம்பநாட்களில் வழங்கிய ஆதரவிற்கு உரிய மரியாதை கிடைக்கவி;ல்லை என்ற ஏமாற்றம் பாக்கிஸ்தானிடம் உள்ளது.

இந்திய ஆப்கான் உறவுகள் வலுவடைவதையும் பாக்கிஸ்தான் விரும்பாது.

ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் தன் மீது சுமத்தப்பட்ட எதிர்பார்ப்புகளை மீறி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையை தோற்கடித்து  சுப்பர் 4 சுற்றில் தகுதி பெற்ற அந்த அணி பங்களாதேசையும் தோற்கடித்துள்ளது.

ஆனால் பாக்கிஸ்தான் குறித்து இவ்வாறு தெரிவிக்க முடியாது- அவர்கள் இந்தியாவிடம் 8 விக்கெட்களால் தோல்வியடைந்துள்ளனர்.

இன்றைய போட்டியில் அவர்கள் மீண்டெழுவதற்கு ஆப்கான் இலகுவில் அனுமதிக்காது.