இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட எழுவரும் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.

இந் நிலையிலேயே சாந்தன் தன்னை விடுதலை செய்ய கோரி தனது வழக்கறிஞர் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சாந்தன் கடிதத்தில்,

“நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன் நான் உண்மையை சொல்கிறேன் ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. அவுஸ்திரேலியாவிற்கு போவது தான் என் நோக்கம்.

அக் காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு கொழும்பு வழியாக செல்லாது இந்தியாவிற்கு வந்து செல்வதை தான் வழக்கமாக கொண்டிருந்தனர்.

அப்படித்தான நானும் வந்தேன். இங்கு வரும் போது இலங்கையில் என் மீது எதுவித குற்ற வழக்குகளும் இல்லை என்று இலங்கை அதிகாரிகளால் சான்றழிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் தான் இங்கு வந்தேன்.

இங்கு வந்த பின் எனது கடவுச்சீட்டை சி.பி.ஐயினர் பெற்றுக்கொண்டனர்.

சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைரை கொலை செய்ய வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னைப் பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய கடவுச்சீட்டை கொண்டு வருவானா?

இக் கொலை வழக்கில் இன்னுமொரு சாந்தனும் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கறிஞர் வாதிடும் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட விடுதலைப்புலிகள் ஆதரவாளர் நீதி மன்றில் சாட்சியம் அளிக்கும் போது என்னை அடையாளம் காட்டவில்லை. வேறொரு சாந்தனின் புகைப்படத்தைNயு காட்டினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558இல், 

இந்த வழக்கில் 19ஆவது எதிரியாக சேர்க்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம் விரைவில் ஒரு முக்கிய தலைவரை கொலை செய்யப்போவதாக நான் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 157இல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.

புலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ 1999இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு புறப்படவே விரும்புகிறேன்.

2011ஆம் ஆண்டில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட போது நோயாளியாக இருந்த என் அப்பா 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியம் முன்னரே இறந்துவிட்டார்.

வயோதிப தாய்க்காவது மகனுக்குரிய கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னை என்னுடைய உறவுகளுடன் சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியம்.

என்னுடைய சிரமமான சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்." என எழுதியுள்ளார்.