இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த தனபால் விஜேரத்னம், மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பாமன்கார்டன் பகுதியிலுள்ள ஒரே முகவரியில் வசிக்கும் 24 மற்றும் 23 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயற்பட்டதே, இந்த கொலைக்கான காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.