இராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே தற்போது உள்ளதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

இக்காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்..

பலாலி இராணுவ தலைமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “2009 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.

இதேவேளை வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது.

இதனிடையே இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தை மக்களிடம் மீளக் கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது.

குறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறைக் குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும்.

இதேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது. 

அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும்” என்று குறிப்பிட்டார்.