(எம்.சி.நஜிமுதீன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்களுக்கு எதரான சதி முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கையில் நம்பிக்கையில்லை 

எனத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, அதனை மேற்கொள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐவரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டு  எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. 

அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டிமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக டி சில்வாவை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் அழுத்தத்தின் பிரகாரமே அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளனர்.

அத்துடன் அச்சதி முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கையில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐந்துபேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.