வவுனியா சேமமடு பகுதியில் இன்று காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த 50 வயதான ஆரோக்கியநாதன் ஞானசீலன் என்ற  வயோதிபர் சேமமடு படிவம் 2இல் தனது சகோதரனின் விவசாயக்காணியில் கச்சான் பயிரிட்டு தோட்டம் செய்து வந்துள்ளார். 

இன்று காலை அப்பகுதியில் தனது மாட்டைத்தேடி காட்டுக்குச் சென்றபோதே காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

காலையிலிருந்து நீண்டநேரமாக காணவில்லை என தெரிவித்து குறித்த நபரின் உறவினர்கள் இன்று மாலை சேமமடுவில் தேடிச்சென்றபோது காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.