(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி கொலை சதித்திட்டமானது அரசியல் பின்னணியைக் கொண்டதாகும். இதன் பின்னால் ரணில் விக்ரமசிங்கவே இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நீதியான விசாரணை இடம்பெறவேண்டுமானால் பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து நீக்கவேண்டும். அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சராக மத்தும பண்டார பெயரளவிலே செயற்படுகின்றார்.

ஜனாதிபதிக்கு இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் இன்று பிரதமருக்கு ஏற்பட்டிருந்தால் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டதன் பின்னரே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கும். 

ஆனால்  நாலக்க சில்வாவை கைதுசெய்வதற்கு வேறு காரணங்கள் இருந்தும் அவரை தற்போதுதான் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளனர். 

ஜனாதிபதிக்கு அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால்  பிரதமரே தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார். 

ஏற்கனவே நாலக்க சில்வா இந்தியா ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக தெரிவித்து போலி சான்றிதழை சமர்ப்பித்தே பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு வந்தார். இந்த குற்றத்துக்காக இதுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை என்றார்.