பொதுஎதிரணி மஹிந்த ராஜபக்ஷ அணி கோத்தபாய ராஜபக்ஷ அணி என இரண்டாக பிரிந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக கோத்தபாய அணியினர் அரசமைப்பின் 20வது திருத்தம் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்குவதை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் தங்கள் தலைவர்களின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக தங்களால் முடிந்த முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும் பாராளுமன்றத்தை மையப்படுத்திய  ஜனநாயக முறை ஸ்தாபிக்கப்படவேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பின் 20வது திருத்தம் நிறைவேறினால் பாராளுமன்றத்தை அடுத்த வருடம் ஒன்பதாம் திகதிக்கு முன்னதாக கலைக்கவேண்டும், புதிய பாராளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவேண்டும் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஏழு மாதங்களால் குறையும் எனவும் ஜே.வி.பி. தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த வருட இறுதியுடன் முடிவிற்கு வருகின்றது எனினும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் அதன் ஏற்பாடுகளின் அடிப்படையில் 2020 வரை சிறிசேன பதவியிலிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.