(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

எரிபொருள் விலை உயர்வினால்  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் உள்ள மீனவர்களுக்கு மாத்திரமாவது எரிபொருள் நிவாரணங்களை வழங்க முடியுமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.

மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்பித்து ஆராய்கின்றேன் என மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, அனுரகுமார திசாநாயக எம்.பி.க்கு வாக்குறுதி வழங்கினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 27/2 இல் மீனவர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புகையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குறித்த கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டில் மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது. அதிலும் மீனவர் சமூகம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. கடந்த மே மாதம் எண்ணெய் விலை அதிகரித்தது. 

அதனை அடுத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்,அதனை அடுத்து மண்ணெண்ணெய் விலை குறைவடைந்தது. 

இதனால் மண்ணெண்ணெய் படகுகளை பயன்படுத்தும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்த போதிலும் பெட்ரோல் டீசல் படகுகளை பயன்படுத்தும் அதிகமான மீனவர்கள் இன்றும் பாரிய நெருக்கடியினை சந்தித்து வருகின்றனர்.