(எம். எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

வாழ்க்கைச் செலவு, கடன் சுமைகள் அதிகரிக்கின்றன பொருளாதார நெருக்கடி தாக்கத்தை செலுத்துகின்ற போதிலும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. அரச, தனியார் துறையின் சம்பளம் உயர்வடையவில்லை. பொருளாதாரத்தை கையாள தெரியாது மௌனக் கொள்கையை அரசாங்கம் கையாண்டால் மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 

நிதி அமைச்சின் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இன்று  நாட்டில் வரிச்சுமை அதிகரித்து செல்கின்றது. கடன் தொகை அதிகரித்து செல்கின்றது, வாழ்க்கைச்செலவு அதிகரித்து செல்கின்றது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் குறித்து எந்த தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்க முடியாது உள்ளது. 

அரச துறையினரதோ அல்லது தனியார் துறையினரதோ சம்பள உயர்வுகள் இல்லாது நடுத்தர மற்றும் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்றுகொண்டுள்ளது. ரூபாவின் வீழ்ச்சியையும் சர்வதேச பொருளாதார நெருக்கடியையும் தொடர்புபடுத்தி அரசாங்கம் நன்றாக கதை கூறுகின்றது.