அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைவீழ்ச்சி காலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் வாழ்க்கைத் தரத்தையும்  குறைத்துவிடக்கூடும்  என உலக வங்கியின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் அபாய வலயங்கள் தொடர்பாக உலக வங்கி விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம், தெற்காசியாவின் சனத்தொகையில் ஏறத்தாழ அரைவாசி அளவிலானோர் அபாய வலயங்கள் எனப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலே வாழ்ந்துவருகின்றனர்.

இப் பகுதிகளில் பயிர்விளைச்சல் குறைவடைதல், குறைவடையும் தொழிலாளர் உற்பத்தி வினைத்திறன் அல்லது தொடர்புடைய சுகாதார தாக்கங்கள் ஆகியன காரணமாக அங்குவாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடையக்கூடும், மோசமான இணைப்புக்களைக் கொண்டிருத்தல் மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருப்பதனால் இந்த அபாயவலயங்களில் உள்ள மக்கள் சில ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையை பொறுத்தவரையில், 

2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அதிகரித்த சராசரி வெப்பநிலையையும் அதிகமான மழைவீழ்ச்சி மாற்றத்தையும் அனுபவிக்கக்கூடிய அதிகமான சாத்தியக்கூறுகளை எதிர்நோக்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு பரிஸ் உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைவாக காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படினும் இலங்கையின் சராசரி வருடாந்த வெப்பநிலையானது 2050 ஆம் ஆண்டளவில் 1.0°C பாகை செல்சியஸ் முதற்கொண்டு 1.5°C செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என பகுப்பாய்வுகளில் இருந்து தீர்மானத்திற்கு வரமுடிந்துள்ளது. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிடின் இலங்கையின் சராசரி வெப்பநிலை 2.0°Cபாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது.

அத்துடன் காலநிலை மாற்றங்கள் குறைவான தனி நபர் வருமானத்திற்கு வழிகோலுவதுடன் அது தெற்காசியா முழுவதிலும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.