‘சுற்றுலாவும் டிஜிற்றல் பரிமாற்றமும்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாப் பணியகம் அறிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சுற்றுலா தின நிகழ்வு தொடர்பில் வட மாகாண சுற்றுலா பணியக அதிகாரிகள் உடனான ஊடக சந்திப்பு நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு குறித்த நிகழ்வு தொடர்பில் விளக்கமளித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா, ‘மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் அனுசரனையுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், வடமாகாண சுற்றுலாப் பணியகமும் இணைந்து இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

நீண்ட கால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மேம்பாட்டு போக்குவரத்துக்கான வீதிகளின் புனரமைப்பும், புகையிரத சேவையின் மீள் அறிமுகமும் வட பகுதிக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்தன.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்ததுடன், வடமாகாண முதலமைச்சின் கீழ் சுற்றுலாத்துறைகென தனியான பிரிவு உருவாக்கப்பட்டு அதனைத் திட்டமிட்ட வகையில் வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடமாகாணத்துக்கென 2017-2020 காலப்பகுதிக்கென தந்திரோபாயத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டதுடன் 2018 யூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப் பணியகம் என்ற ஓரு தனியமைப்பு உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் அதனிடம் கையளிக்கப்பட்டன.

வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய சுற்றுலாப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், தேசிய ரீதியாக உலக சுற்றுலா தினத்தை வட மாகாண சபையுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா தினம் 2018ஐ இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், வட மாகாண சுற்றுலா பணியகமும் இணைந்து யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தில் கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

உலக சுற்றுலா தினத்தின் தொனிப்பொருளான ‘சுற்றுலாவும் டியிற்றல் பரிமாற்றமும்’ (Tourism and Digital Transtarmation) என்பதனை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறையை தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தினூடாக வளர்த்தெடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

உலக சுற்றுலா தினத்திற்கென கொழும்பிலிருந்து புகையிரத மார்க்கமாக தென்பகுதி ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் வருகை தர இருப்பதனால் வட மாகாண சுற்றுலாத் துறையின் விழிப்புணர்வு சாத்தியமாவதுடன் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் எடுத்துவரப்படும் சுற்றுலாத் துறையினரின் உற்பத்திகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 26ஆம் திகதி சுற்றுலாத் துறைக்கான கண்காட்சியை வட மாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் யாழ் மாநகரசபையின் மைதானத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

இதன்போது எமது பிரதேச கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறவென மேடை அமைக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவின் நிகழ்ச்சிகளும், வடமாகாண கல்வியமைச்சின் கலாச்சாரப் பிரிவின் நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்படவுள்ளன.

உலக சுற்றுலா தினமான செப்ரம்பர் 27ம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம் பெறவுள்ளதுடன், மாலை Tourism and Digital Transtarmation என்ற தொனிப்பொருளின் ஆய்வரங்கு இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து இரவு பல்கலைக்கழக மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் சமகாலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறவதற்கான ஓழுங்குகள் செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.