காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி, திகிலிவெட்டை, குளத்துவெட்டையைச் சேர்ந்த 36 வயதான சுந்தரலிங்கம் ராஜு மற்றும் 24 வயதான வடிவேல் தவக்குமார் ஆகிய இருவருமே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது மாலையாகியதும் தமது மாடுகளைப் பட்டியடிக்கு விரட்டிக் கொண்டிருந்தபோது காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக பற்றைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொறியில் இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.

உடல்பூராகவும் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் வீழ்ந்து கிடந்த நிலையில் அக்கம்பக்கத்திலிருந்த பட்டிக்காரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.