அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள முகாம்களில் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா அகதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தும் நவ்று முகாமில் மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இது தொடர்பில் கடிதமொன்றை பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு அனுப்பிவைத்துள்ளது.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டு வரும் உளஉடல் பாதிப்புகள் குறித்து கவலையளிக்கும் அறிக்கைகள் வெளியாகின்றன என அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நவ்றுவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவுஸ்திரேலியாவிற்குள் கொண்டுவருமாறும் நவ்று முகாமிற்கு மருத்துவர்களை அனுப்புமாறும் மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்களை  மூன்று முகாம்களில் தடுத்துவைக்கும் கொள்கையை அவுஸ்திரேலியா பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

அவுஸ்திரேலியா சுமார் 100 சிறுவர்களையும் முகாம்களில் தடுத்துவைத்திருப்பது குறித்து சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.