(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பெருந்தோட்ட பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் திருத்தங்களின்றி நேற்று பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டதுடன் மலையக அபிவிருத்திக்கு தடையாக இருந்த 1987 ஆம் இலக்க பிரதேச சபை திருத்த சட்டத்தின் 37 ஷரத்தும்  பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நேற்று திருத்தம் செய்யப்பட்டது.பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. இதன்போது பெருந்தோட்ட பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்தை அமைச்சர் பி.திகாம்பரம் முன்வைத்தார். அத்துடன் 1987 ஆம் இலக்க பிரதேச சபை திருத்ததை அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்தார்.

இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற விவாதங்களில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர். அத்துடன் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் விவாதங்களில் பங்குக் கொண்டனர். 

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல் மலையக பிராந்திய  அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்தின் குறிக்கோளாக கருதப்படுகின்றது.

அத்துடன் பெருந்தோட்டச் சமுதாயத்தினர் தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல். அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன்படிக்கைகளை செய்துகொள்ளுதல்.

இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தல்.

அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணல்,அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதியை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்தல் ஆகியவை பெருந்தோட்ட பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை செயற்பாடுகளாகும்.

அத்துடன் அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல், அதிகாரசபையின் குறிக்கோள்களை எய்தும் முகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல், புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.

தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல், இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல் போன்றவை பிராந்திய அபிவிருத்தி அதிகாரசபையின் பணிகளாகும்.

அத்துடன் ஏழு அமைச்சுகளின் ஒவ்வொரு பிரதிநிதிகளை உள்ளடக்கிய முகாமைத்துவ சபையொன்றும் அதிகார சபைக்கான விசேட நிதியமொன்றும் நிறுவ வேண்டும் என பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.    

மேலும் மலையக அபிவிருத்திகளுக்கு இதுவரை காலம் நிதி ஒதுக்கீடு செய்வது சட்ட விரோதமாக கருதும் 1987 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 33 ஆவது ஷரத்து நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மலையக அபிவிருத்திக்காக பிரதேச சபை மட்டத்தில் இருந்த தடைகள் இந்த திருத்தத்தினால் சீர்செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.