“சிரிசர பிவிசும” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்ட காலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட யானைகளுக்கான வேலியை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி பணிப்புரையின் பேரில் “சிரிசர பிவிசும”  மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

 குளங்களின் புனரமைப்புக்கு மேலதிகமாக பாடசாலை கட்டட அபிவிருத்தி, யானைகளுக்கும் மனிதர்களுக்கிடையிலான மோதலை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், கிராமிய வீதி மேம்பாட்டுத் திட்டம், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக அதன் கீழ் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கியமானதொரு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் “சிரிசர பிவிசும” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான உடல் உழைப்பு இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்படுகின்றது. 

மாவட்டத்திலுள்ள எல்லங்கா குளக்கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள 500 புனரமைப்புச் செய்யும் பாரிய நிகழ்ச்சித் திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

இதன் கீழ் 2017ஆம் ஆண்டு 24 குளங்கள் புனரமைக்கப்பட்டதுடன், 2018 ஆம் ஆண்டு 25 குளங்களும் இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 34 குளங்களும் புனரமைக்கப்படும். 

திருகோணமலை மாவட்டத்தில் 500 குளங்களை புனரமைப்புச் செய்யும் எல்லங்கா குள வலயமைப்பை தயாரிக்கும் பணி 2017 ஆம் ஆண்டு கோமரங்கடவலவில் ஆரம்பிக்கப்பட்டது. 

குளத்திற்கு குளம் நீரை நிறைக்கும், மழை நீர் விரயமாகாத வகையிலான வலையமைப்பை கொண்டுள்ள பண்டைய நீர்ப்பாசன முறைமையான இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களும் விவசாயிகளது வாழ்க்கையும் வளம் பெறுவதுடன் குளத்தை சுற்றிய சுற்றுச்சூழலை வளப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளதற்கு அமைவாக 200 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலங்களை உள்ளடக்கிய குளங்கள் இதன் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன. 

மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இது போன்ற 400 நீர்ப்பாசன தொழிற்துறைகளின் கீழ் 19,000 விவசாயக் குடும்பங்களும், 42,000 ஏக்கர் வயற்காணிகளும் உள்ளடக்கப்படுகின்றன. 

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் எல்லங்கா குள கட்டமைப்பின் புனரமைப்பு நடவடிக்கைகளில் பதவி ஸ்ரீபுர, கோமரங்கடவல, மொரவெவ, கந்தளாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டம் பல கட்டங்களின் கீழ் நிறைவு செய்யப்படவுள்ளது. இதன் கீழ் சுமார் 20 எல்லங்கா கட்டமைப்புகள் உள்ளடங்குவதுடன், 500 குளங்களை புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. 

சிறுபோகம், பெரும்போகம் ஆகிய இரண்டு போகங்களின் போதும் விவசாயம் செய்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்குதல், விவசாய நிலங்கள் வரட்சிக்கு ஒத்திசைவாய் இருப்பதற்கு வழி வகுத்தல், சூழல் வெப்பநிலை அதிகரிப்புக்கான தீர்வாக பண்டைய விவசாய முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துவது இந்த திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கமாகும். 

இன்றைய தினம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும் யானை வேலியை அமைப்பதற்கு 22.4 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்போது கிராமிய மக்கள் முகங்கொடுத்திருக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல் காரணமாக குறித்த பிரதேசங்களில் இடம்பெறும் பாதிப்புகளை குறைப்பதற்கு அதன் மூலம் முடியும். யானை வேலிகளை நிர்மாணிப்பதற்கு மரத்தூண்களுக்கு பதிலாக கொங்கிரீட் தூண்கள் பயன்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பயன்படுத்தப்படும் கொங்கிரீட் தூண்கள் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படவுள்ள “சிரிசர பிவிசும” திருகோணமலை மாவட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் 100 புதிய ஆசிரியர் இல்லங்களை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கிராமிய மக்களின் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய வீதி வலயத்தை புனரமைக்கும் சவாலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வறுமையை ஒழித்தல், பேண்தகு அபிவிருத்தி ஆகிய திட்டங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள “சிரிசர பிவிசும” திட்டத்தின் கீழ் திருகோணமலையை பசுமை பிரதேசமாக அதாவது சுற்றாடல் நேய முன்னுதாரணமான பிரதேசமாக கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகின்றது.