பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி 29 ஓவர்களில் நிர்ணயித்த வெற்றியிலக்கினை கடந்து 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல், 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 47 ஓட்டத்தையும், மலிக் 43 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் அணித் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 8.4 ஆவது ஓவரில் ரோஹித் சமர்மா ஒரு நான்கு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது.

12.4 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா தனது 35 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்து, 13.1 ஓவரில் 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஷாத் கானுடைய பந்து வீச்சில் 52 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு தவானுடன் ஜோடி சேர்ந்தாட இந்திய அணி 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 100 ஒட்டங்களை தொட்டது. இதையடுத்து தவான் 46 ஓட்டத்துடன் அஷ்ரப்புடைய பந்து வீச்சில் பாபார் அசாமிடம் பிடிகொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறிட்டார்.

இவரையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் எதிர்கொண்ட மூன்றாவது பந்தை ஆறு ஓட்டமாக மாற்றிக் காட்ட அரங்கில் ஆராவாரம் அதிகரித்தது. மறுமுனையில் 27.2 ஆவது ஓவரில் ராயுடு ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக்கொடுக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.

இறுதியில் ராயுடு மற்றுமோர் நான்கு ஓட்டத்தை விளாச இந்திய அணி 29 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கான 163 ஓட்டங்களை கடந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தினேஷ் கார்த்திக் மற்றும் ராயுடு 31 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக அஷ்ரப் மற்றும் ஷாத் கான் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

போட்டியில் அதிக 6 ஓட்டங்களை விளாசிய வீரராக ரோஹித் சர்மாவும் போட்டியின் ஆட்டநாயகனாக 7 ஓவர்களுக்கு 15 ஒட்டங்களை கொடுத்து மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றிய புவனேஸ்வர் குமாரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நாளை மாலை 5.00 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் ஆறாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பஙகளாதேஷ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.