இந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ளத் தெரியாமல் திணறி, 43.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும்‍ இழந்து 162 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாட இமாம்-உல்-ஹக் மற்றும் பகர் ஜமான் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட, 2.1 ஆவது ஓவரில் இமாம் இரண்டு ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து ஜமானம் எதுவித ஓட்டங்களும் இன்றி புவனேஸ்வர் குமாரின் பந்தில் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 4.1 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து மூன்று ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து அடுத்து ஜோடி சேர்ந்த மலிக் மற்றும் பாபர் அசாமின் ஜோடி அடித்தாட ஆரம்பிக்க பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 25 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்தும் 14.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களை கடக்க 17 ஆவது ஒவருக்காக பந்து வீசிய பாண்டி தீடீரென ஏற்பட்ட தசை பிடிப்புக் காரணமாக சுருண்டு வீழ்ந்ததையடுத்து ஆடுகளம் விட்டு வெளியேறினார்.

அணியின் ஒட்ட எண்ணிக்கை 85 ஆக இருக்கும் போது பாபர் அசாம் 47 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் போல்ட்  முறையில் ஆட்டமிழந்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் சப்ரஸ் அஹமட்டும் 6 ஓட்டத்துடன் கேதர் யாதவ்வின் பந்து வீச்சில் மணீஷ் பாண்டேவின் அசத்தலான பிடியெடுப்பு காரணமாக வெளியேறினார்.

இதையடுத்து மலிக்குடன் ஜோடி சேர்ந்து ஆசிப் அலி துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதையடுத்து மலிக் 43 ஒட்டங்களை பெற்றுக் கொண்டு அநாவசியமாக ரன் அவுட்  முறையில் ஆட்டமிழந்தார்.

அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ஆசிப் அலி 9 ஓட்டத்துடனும் ஷாத் கான் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 33 ஓவர்களுக்கு ஏழு விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

அதன்பின் அஷ்ரப் மற்றும் மொஹமட்  அமீர் ஜேடி சேர்ந்து ஆடி வர அணி 150 ஓட்டங்களை கடந்தது. எனினும் அதையடுத்து 41.1 ஆவது ஓவரில் அஷ்ரப் 21 ஓட்டத்துடன் பும்ராவின் பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் களமிறங்கிய ஹசான் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் ஒரு ஓட்டத்துடன் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 160 ஓட்டங்களுக்குள் ஒன்பதாவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது.

இறுதியாக பும்ராவின் பந்து வீச்சில் உஷ்மன் கான் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களுக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 163 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில புவனேஸ்வர் குமார் மற்றும் கேதர் யாதவ் தலா 3 விக்கெட்டுக்களையும், பும்ரா இரண்டு விக்கெட்டுக்களையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.