(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும்  விதமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடினார்.

என கூறப்படும் விடயம் தொடர்பில், குறித்த கலந்துரையாடல் பதிவு செய்யப்ப்ட்ட தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று  உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாயவுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் குரித்த விசாரணை அறையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டிகே மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க ஆகியோர் நேற்று கோட்டை நீதிவானிடம்  முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த தொலைபேசி கலந்துரையாடலானது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி முறைப்பாட்டாளரான மோசடி எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு  சொந்தமானது எனவும் அதனை வழக்குப் பொருளாகவே கைப்பற்றியுள்ளதாகவும் சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிவானுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதில் உள்ள குரல் பதிவுகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா - நாமல் குமார ஆகியோரினுடையதா என்பதை உறுதி செய்ய குரல் பதிவு பகுப்பாய்வினையும் முன்னெடுக்க  இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தர்விடுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.