சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல்  கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்  கைதிகளின் விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்றையதினம் அரசியல் கட்சிகளும், பொதுஅமைப்புகளும்  இணைந்து மேற்கொண்ட  கலந்துரையாடலில் பங்கெடுத்தபின்னர்  ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  கூறினார்.

 இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;  

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் அரசியல்கைதிகளிற்கு ஆதரவுதெரிவித்தும் ஏனையசிறைகளில்வாடும் கைதிகளின் விடுதலையைவலியுறுத்தியும் வவுனியா மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புகளால் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள பட்டு ஒரு முடிவு எட்டபட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 22 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்றை மேற்கொள்வதாக தீர்மானிக்கபட்டிருக்கிறது. 

அரசியல் கைதிகள் 10 தொடக்கம் இருபதுவருடங்கள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள்.  அரசியல்கைதிகளை  விடுவிப்பதாக ஜனாதிபதியால் கூட முன்னர்  வாக்குறுதி வழங்கபட்டிருந்தது.எனினும் எந்த தீர்வும் இதுவரை இல்லை. 

அவர்கள் பலமுறை சிறைச்சாலைகளுக்குள்ளே சாத்வீகமான போராட்டங்களை மேற்கொண்டு நம்பிக்கை இழந்திருக்கும் இந்தநேரத்தில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.  

இந்தகைதிகள் தொடர்பாக இலங்கை அரசினால் விசேடநீதிமன்றம் ஒன்று அமைக்கபட்டது. ஆனால் அந்தநீதிமன்றம்  அரசியல்கைதிகளின் விடுதலைக்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளையும்எடுக்காத நிலைமை உள்ளது.