ரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில்  மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டனம் செய்துகொண்டிருக்கிறது. அந்நாட்டின் தலைவி ஆங் சான் சூகீ மீது பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இறுதியாக அவர் இப்போது ரொஹங்கியா நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும் என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், அவரின் இந்த ஒப்புதல் மியன்மார் இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அயல்நாடான பங்களாதேஷுக்குத் தப்பியோடிய 7 இலட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியாக்களுக்கு போதுமான ஆறுதல் வார்த்தையாக இருக்கப்போவதில்லை.

 

ராக்கைன் மாநிலத்தில் ரொஹிங்கியாக்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்ட கொடூரமான ஒடுக்குமுறையை ' இனச்சுத்திகரிப்பு என்பதைத் தவிர வேறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது' என்று ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் மியன்மாரின் உயர்மட்ட ஜெனரல்கள் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற  ' இனப்படுகொலைக்காக' விசாரணைசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

ராக்கைன் மாநிலத்தில் மியன்மார் துருப்புக்கள் செய்திருக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் கிராமங்கள் நிர்மூலம் ஆகியவற்றை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அறிக்கை மேல் அறிக்கையாக வெளியிட்டு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வருடம் வன்முறைகளில் இறந்துபோன ராஹிங்கியாக்களின் தொகை 10 ஆயிரத்துக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ராக்கைன் மாநில நிலைவரங்கள் தொடர்பாக ஆங் சான் சூகீ பேசுவது அபூர்வம்.ரொஹிங்கியா அகதிகள் பற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பதில்லை.ஏன் ரொஹிங்கியா என்ற சொலைக்கூட அவர் உச்சரிப்பதும் அபூர்வம்.வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்தவாரம்நடைபெற்ற சர்வதேச மகாநாடொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தவேளை ரொஹிங்கியா நெருக்கடி குறித்து கருத்துவெளியிட்ட அவர் இலாணுவத்துடனான அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டின்கீழ் தனது சிவிலியன் அரசாங்கம் 75 சதவீதமான அதிகாரங்களையே கொண்டிருக்கிறது என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த விளக்கம் மியன்மாரின் இராணுவக்கும்பல் ஆட்சியைத் தன்னந்தனியனாக எதிர்த்துநின்று போராடி  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்து இறுதியில் 2015 தேர்தல்களில் தனது கட்சியை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் என்ற அவரின் அந்தஸ்துக்குப் பொருத்தமானதேயல்ல.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றிய இரு மியன்மார் நிருபர்கள் ( வா லோன், யாவ் சூ ஊ) அண்மையில் சிறைக்கு அனுப்பப்பட்தை சூகீ நியாயப்படுத்திக் கருத்துவெளியிட்டமை மிகவும் பாரதூரமான ஒரு செயலாகும்.அந்த நிருபர்கள் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தை மீறியதற்காகவே நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.கடந்த வருடம் ராக்கைன் மாநிலத்தில் இன் தின் என்ற கிராமத்தில் ரொஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 10 ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அம்பலப்படுத்தியதில் வகித்த பங்கிற்காகவே அவ்விரு நிருபர்களும் 7 வருட சிறைவாசத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று பெரும்பாலான மனித உரிமைகள் குழுக்களும் ஊடகவியலாளர்களின் அமைப்புக்களும் நம்புகின்றன.பல வருடங்களாக வீட்டுக்காவலில் இருந்தபோது சூகீ  தனது செய்திகளை உலகிற்கு தெரியப்படுத்துவதற்கு ஊடகங்களிலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது.இராணுவ ஆட்சியாளர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் உத்தரவுகளையும் மீறி துணிச்சலுடன் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் சூகீயின் கருத்துக்கள் உலகெங்கும் சென்றடைவதற்கு உதவினார்கள்.அதே சூகீ இன்று நியாயப்படுத்தமுடியாததை நியாயப்படுத்த முயற்சிப்பதை உண்மையில் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

1991 ஆம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றபோது சூகீ தனது மகன் மூலமாக அனுப்பிய செய்தியில் பர்மாவின் சகல மக்களினதும் பெயரிலேயே அந்தப் பரிசை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.ஆனால், இன்று மெய்நடப்பில் மியன்மாரின் சிவிலியன் தலைவியாக இருக்கும் அவர் தனது நாட்டின் சகல மக்களினதும் உரிமைகளையும் நலன்களையும் இதயத்தில் கொண்டவராக இல்லை என்பது தெட்டத்தெளிவானது.

வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்