இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று மாலை 5.00 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

'ஏ' பிரிவில் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிக் கொண்ட ஹொங்கொங் அணி வெளியேறியுள்ள நிலையில் இவ் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

எனவே இன்று இடம்பெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தமது பலத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஹொங்கொங் அணியுடனான வெற்றியை மிகவும் போராடிப் பெற்றுக் கொண்டமையினால் இன்று இடம்பெறவுள்ள இப் போட்டியில் அவர்கள் முழுத்  திறமையையும் வெளிப்படுத்தியாக வேண்டும். 

ஏனெனில் பாகிஸ்தான் அணி துபாயில் நீண்ட காலமாக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளது. அந்த அணியினர் அங்குள்ள சூழ்நிலை, ஆடுகளத்தை நன்கு அறிந்து இருப்பார்கள். 

ஆகவே பாகிஸ்தான் சவாலை இந்தியா சமாளிக்க பல வியூகங்களை வகுத்து போராட வேணடியிருக்கும். 

ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொறுத்தவரையில் இவ் இரு அணிகளும் இதுவரையில் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 5 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.