பதியத்தலாவை பிரதேச சபைத் தலைவருக்கும் சபையின் செயலாளருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் பிரதேச சபை அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

சபையின் தலைவர் லலந்த சுமித் செனவிரட்னவிற்கும் சபை செயலாளர் ஆர்.எம்.குசுமாவதிக்குமிடையே தொடர்ந்து கருத்து முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

சபைத் தலைவர் மது போதையில் செயலாளரின் அலுவலகம் சென்று, செயலாளரை அவமதிக்கும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதையடுத்து, பிரதேச சபை செயலாளர் பதியத்தலாவை பொலிஸ் நிலையத்தில் சபைத் தலைவருக்கெதிராக புகார் செய்துள்ளார்.

இப் புகாரின் பின்னர் ஆரம்பமான முதல் சபை அமர்வு இன்று இடம்பெற்ற போது, சபை அமர்வின் போது, சபைத் தலைவருக்கும் சபை செயலாளருக்குமிடையே கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சபை அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

சபைத் தலைவர் அங்கு பேசுகையில்,

“சபை செயலாளரின் நடவடிக்கைகளினால் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு, மக்கள் பணியை ஆற்ற முடியவில்லை. சபைக்கு 7 மாதங்களாகியும் எம்மால் சுதந்திரமாக மக்கள் பணியை ஆற்றமுடியவில்லை. எனது தொலைபேசிக் கட்டணத்தை செலுத்துவதற்கும் சபை செயலாளர் அனுமதி வழங்கவில்லை. இது போன்று பல்வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி சபை செயலாளரின் வாகன செலவினைப் பெற என்னால் அனுமதி வழங்க முடியாது.

சபை செயலாளர், என்னை விமர்சனம் செய்து “பேஸ் புக்” கிலும் பல்வேறு விடயங்களை புகுத்தி வருகின்றார். இதனால் எனது பதவிக்கும் எனது பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கெதிராக நான் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.

இச் செயலாளரினால், மக்கள் பணியை எம்மால் ஆற்ற முடியாது. சபைக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே, சபை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

இதற்கு சபை செயலாளர் ஆர்.எம்.குசுமாவதி கண்ணீர் மல்க “அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வகையிலான அபாண்ட விமர்சனம் செய்யப்படுகின்றது. சபைத் தலைவர் மதுபோதையில் எனது அலுவலகம் வந்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, கடமையிலிருந்த சபை செயலாளர் மீது சபைத் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்துள்ளார்.

எனது கடமை பிரயாண செலவினைப் பெறவும் சபைத் தலைவர் தடையாக இருக்கின்றார். எனக்கு பல்வேறு வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தும் இச் சபைத் தலைவருடன் செயலாற்ற என்னால் முடியாது. விரைவில் இடமாற்றம் பெற்றுச் செல்லவும் முடிவு செய்துள்ளேன்” என்றார்.

இதையடுத்து, சபை அமர்வு கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.