காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 10 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்றை அமைப்பதற்கும் துணை குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை செய்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருப்பதாக காணி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தினால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் மூலம், பாதிப்பை ஈடுசெய்யக்கூடிய சட்டரீதியிலான பொறுப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பில் தனது சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது. 

இதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதி உதவி வேலைத் திட்டம், கடன் நிவாரண வேலைத் திட்டம், வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டம், கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டம், தொழிற்பயிற்சி, வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், தொடர்பான சிபார்சுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த சிபார்சுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைப்பதற்காக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் கீழ் மேலும் 10 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணை குழு ஒன்றை நியமிப்பதற்கும் உப குழுவின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.