வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ்ஸின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர்  28 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில்  தனியார் பஸ்ஸின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியபோது எதிர்வரும் (01.10.2018) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தனியார் பஸ்ஸின் உரிமையாளரையும் கைதுசெய்ய வேண்டுமென தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா, முல்லைத்தீவு , களுவாஞ்சிக்குடி மாவட்ட இ.போ.ச பஸ்கள் நேற்று முன்தினம்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று  அதிகாலை தனியார் பஸ்ஸின் உரிமையாளர் சரணடைந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினர் அவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

தனியார் பஸ்ஸின் உரிமையாளரை நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 02.10.2018 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பஸ்ஸின் வெளிமாகாண சேவைகள் நேற்று  மதியம் முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் இன்றையதினம் வெளிமாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.