(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்பித்த 'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை' மீதான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் இன்று  இடம்பெறவுள்ளது. 

'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை' ஒன்றினை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்தின் பின் பாராளுமன்றில் சட்டமூலமாக அங்கீகரிப்பதற்கு சமர்பிக்கப்பட்டது.  

அதன்பின்னர் பாராளுமன்றம் நீதிமன்ற விளக்கத்திற்காக காத்திருந்த நிலையில், எவ்வித எதிர்ப்புக்களும் முன்வைக்கப்படாத காரணத்தால் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது. 

இதன்படி இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு 'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை' சட்டமூலத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பின் பின் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.  மலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு முறையான நிறுவனம் ஒன்று இல்லை. மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் முழுமையான அரச நிறுவனமாக இல்லாத காரணத்தால் அதன் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து செல்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 

அபிவிருத்தி திட்டங்களை முறையாக முன்னெடுத்துச் செல்ல மலையகத்தில் ஒரு அரச நிறுவனம் இல்லாமல் இருந்த நிலையில், அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் புதிய  'பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி அதிகார சபை'  ஒன்றை உருவாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.