தலைமன்னார் கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்று காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த மீனவர் ஒருவர் மூன்று தினங்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி பிற்பகல் 6 மணியளவில் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 39 வயதான இராமசாமி சிறிகாந் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் வழமைபோன்று வெளிகள இயந்திர படகு ஒன்றில் தனிமையாக மீன் பிடிக்காகச் சென்றிருந்தபொழுது காணாமல் போயிருந்தார்.

தலைமன்னார் கடற்கரையிலிருந்து வட கடல் பக்கமாக சுமார் பத்து கடல்  கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் வலைகளை போட்டுக் கொண்டிருந்த சமயமே இவர் காணாமல் போனதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர் தொடர்பாக தலைமன்னார் பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை  குறித்த கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபரின் படகு மற்றும் வலைகளை மீட்டுள்ளனர்.  

இந்நிலையில் காணாமல் போன மீனவரைத் தேடி தலைமன்னார் கடற்படையினரும் அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் முப்பது படகுகள் ஒன்றாக இணைந்து தேடுதல் மேற்கொண்டதை  தொடர்ந்து இன்று  காலையில் தலைமன்னார் கடல் பரப்பில் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு குறித்த சடலம் பிரேத பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.