14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று துபாயில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள நிலையில் இப் போட்டியை இந்திய அணி புறக்கணிக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான், கிரிக்கெட் உலகிலும் சரி இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளிலும் சரி எப்போதும் பனிப்போருடன் முறுகல் நிலை நீடித்துக் கொண்டே இருக்கின்றது.

இந் நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கடுமையான சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியதாவது, பாகிஸ்தான் இராணுவத்திடம் அகப்பட்ட எமது வீரரை அவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். அவரது தொண்டைப் பகுதி அறுப்பட்டுள்ளது. உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இறுதியாக அவரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தானின் இராணுவத்தின் இவ்வாறான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார்.

இது இவ்வாறிருக்க நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் போட்டி இன்று துபாயில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரடியாக பார்க்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பின்னர் பாகிஸ்தானிய இராணுவம் இந்தியப் படையினருக்கு எதிராக மூன்று முறை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் இராணுவத்தின் மிருகத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று இடம்பெறவுள்ள பாகிஸ்தானுடானான ஆசிய கிண்ணப் போட்டியை இந்திய அணி புறக்கணித்து இம்ரான் கானுக்கு பதிலடி கொடுக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.