ஹொங்கொங் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி ஹொங்கொங் அணியை 259 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 26 ஓட்டத்தினால் முதல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணியை பணித்தது. இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக தவான் 127 ஓட்டத்தையும், ராயுடு 60 ஓட்டத்தையும் தினேஷ் கார்த்திக் 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

286 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஹொங்கொங் அணிக்கு ஆரம்பமே அமோகமாக அமைந்தது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய நிஜாக்கத் கான் மற்றும் அணித் தலைவர் அன்சுமன் ரத் பலமான ஒரு அடித்தளத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சாளார்களை திணற விட 9.2 ஓவர்களுக்கு அணி 50 ஓட்டங்களை கடந்தது முதல் 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

12 ஆவது ஓவருக்காக ஷர்டுல் தாகூர் பந்துப் பறிமாற்ற அந்த ஓவர் ஹொங்கொங் அணிக்கு மேலதிகமான ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தது. அதற்கிணங்க அந்த ஓவரில் ஷர்டுல் தாகூர், மூன்று நோபோல்களையும் ஒரு உதிரி ஓட்டம் அடங்கலாக அந்த ஓவரில் 17 ஓட்டங்களை அள்ளிக் கொடுக்க, அதே ஓவரில் நிஜாக்கத் கான் 45 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்தார்.

ஒரு கட்டத்தில் ஹொங்கொங் அணி 17.4 ஓவர்களுக்கு ஏதுவித விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை தொட்டது. நிஜாக்கத் கான் 59 ஓட்டத்துடனும் அணித் தலைவர்  அன்சுமன் ரத் 32 ஓட்டத்துடனும் ஆடி வந்தனர்.

28.2 ஆவது ஓவரில் அன்சுமன் ரத் 75 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 7 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் 30.4 ஆவது பந்தில் நிஜாக்கத் கான் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொள்ள அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ தொட்டது.

இந் நிலையில் 34.1 ஓவரில் அன்சுமன் ரத் 73 ஓட்டத்துடன் குல்தீப் யாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன்படி ஹொங்கொங் அணி 174 ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அன்சுமன் ரத் வெளியேற பாபர் ஹயத் ஆடுகளம் நுழைந்தார்.

92 ஓட்டத்துடன் ஆடிவந்த நிஜாக்கத் கான் கலீல் அமீட்டுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க ‍ஹொங்கொங் அணி தடுமாற ஆரம்பித்தது. மேலும் 39.1 ஓவரில் கிறிஸ்டோபர் கார்ட்டர் மூன்று ஓட்டத்துடன் கலீலுடைய பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து அதிரயாக ஆடத் தொடங்கிய பாபர் ஹயத்தும் 40.2 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன்  ஆட்டமிழக்க, ஹொங்கொங் அணி 199 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்து இக் கட்டான நிலைக்கு போனது.

44.2 ஆவது ஓவரில் கின்சித் ஷாவும் சாஹலுடைய பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த அலிஸ் கானும் சஹாலுடைய பந்தில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க ஹொங்கொங் அணி 228 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

50 ஓவர்களின் முடிவில் ஹொங்கொங் அணி 8  விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 26 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது. 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல், கலீல் அஹமட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நா‍ளை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.