முல்லைத்தீவு - ஒதியமலை கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட கறிவேப்ப முறிப்பு குளத்தின் மறுசீரமைப்பு நிலமைகளை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த குளத்தின் மறுசீரமைப்பு தொடர்பாக பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது இந்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் ஒதியமலை கமக்கார அமைப்பினரால் ரவிகரனிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருகையில்,

ஒதியமலை கமக்கார அமைப்பினர் அழைப்பினை ஏற்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கடந்த வாரம், மறுசீரமைப்பு வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கறிவேப்ப முறிப்புக் குளத்தினை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் குறித்த குளத்தின் மறுசீரமைப்பு தொடர்பாக ஒதியமலை கமக்கார அமைப்பினராலும், மக்கள் சார்பாளர்களாலும் பிரதேச மற்றும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பல தடவைகள் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் விளைவாக தற்போது இந்த குளத்தினுடைய 75 வீதமான மறுசீரமைப்பு வேலைகள் நிறைவுற்றுள்ன. 

கருவேப்ப முறிப்பு குளத்தின் கீழ் 67 பயனாளிகளுக்குரிய 200 ஏக்கர் இற்கும் மேற்பட்ட நீர்ப்பாசன வயல் நிலங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒதியமலை கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட தொல்லைப்புலவு குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்களும் விடுவித்து தரப்பட வேண்டுமென ஒதியமலை கமக்கார அமைப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

குறித்த தொல்லைப்புலவு குளத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு மேற்பட்டவர்களுக்கு, 150 ஏக்கர் இற்கும் மேற்பட்ட நீர்பாசன வயற் காணிகள் காணப்படுவதாகவும், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிப்புக்குள்ளான தமது கிராமத்திற்கு நீர்ப்பாசனத்துடனான இக்குளங்களின் தேவை என்பது மிக முக்கியமானது. என கமக்கார அமைப்பின் சார்பாளர்களால் தெரிவிக்கப்பட்டது.