ஹொங்கொங் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் தவானின் சதம் மற்றும் அம்பத் ராயுடுவின் அரை சதம் என்பவற்றின் துணையுடன் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய இந்திய அணி சார்பில் முதல் துடுப்பெடுத்தாட அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் மாறி மாறி நான்கு ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக அதிகரித்தனர் அதன்படி இந்திய அணி 7.3 ஓவரில் 45 ஒட்டங்களை கடந்தது எனினும் 7.4 ஆவது பந்தில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 23 ஒட்டத்துடன் எஹ்சான் கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து அம்பத் ராயுடு களம்புகுந்தாட ஹொங்கொங் அணியினருக்கு இந்திய அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்த வகுத்த  வியூகங்கள் அனைத்தும் தோற்றுப் போனது. அதற்கிணங்க 16 ஓவர்களின் போது இந்திய அணி ஒரு விக்கெட்டினை 86 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்தது.

தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த தவான் 19.1 ஆவது ஒவரில் அரை சதம் விளாசி, 19.4 ஆவது ஓவரில் தவான் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 

25 ஆவது ஓவரில் இந்திய அணி 135 ஓட்டத்தை பெற்றுக் கொள்ள தவான் 75 ஓட்டத்துடனும் ராயுடு 39 ஓட்டத்துடனும் கத்துக் குடிக்களை பந்தாடி வந்தனர்.

26.4 ஆவது ஓவரில் இவர்கள் இருவருமாக இணைந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து ராயுடு எதிர்கொண்ட 63 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்று அரை சதம் கடக்க, இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.

29.2 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 162 இருக்கும்போது ராயுடு 60 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் ஆடுகளம் நுழைந்து தவானுடன் கைகோர்த்தார். அதைத் தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கி தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த தவான் 105 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 14 சதத்தை பூர்த்தி செய்தார்.

தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்து தொடர்ந்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 40 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டத்தை பெற்றது. எனினும் 40.4 ஆவது ஓவரில் தவான் 127 ஓட்டத்துடன் கின்சித் ஷாவுடைய பந்து வீச்சில் ஆட்டமிழக்க, களமிறங்கிய தோனியும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து தினேஷ் கார்த்தக்கும் 33 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 42.5 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதேவேளை இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து புவனேஸ் குமார் மற்றும் யாதவ் ஜோடி சேர்ந்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகம் குறைவடைந்தது. அதன்படி 48.4 ஆவது ஒவரில் புவனேஷ் குமாரும் ஆட்டமிழக்க இந்திய அணி தனது 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

போட்டியில் அதிரடியான ஆட்டத்தை தவான் ஆரம்பத்தில் தொடக்கி வைத்தாலும் முடிவில் எவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஹொங்கொங் அணிக்கு வெற்றியிலக்காக 286 ஓட்டத்தை நிர்ணயித்தது.

பந்துவீச்சில் ஹொங்கொங் அணி சார்பில் கின்சித் ஷா மூன்று விக்கெட்டுக்களையும், எஹ்சான் கான் இரண்டு விக்கெட்டுக்களையும், நவாஸ் மற்றும் அலிஸ் கான் ஒரு விக்கெட்டினையும்  வீழ்த்தினர்.