ஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் 2015 அக்டோபரில் தணித்தது.

அந்த பதற்றநிலை இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கும் காரணமாகியது.ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.வரிச்சலுகையை விலக்கிக்கொண்டது.மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக அரசாங்கம் கடந்தகால பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் தேசிய நல்லிணக்கத்துக்கான பாதையை வகுப்பதற்குமான தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தது.

ஆனால், சர்வதேச நெருக்குதலின் விளைவாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதென்பது இலங்கையின் பாதுகாப்பு படைகளையும் பெரும்பான்மையினத்தவரான சிங்களவர்களையும் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகவே இருந்துவருகிறது.ஜெனீவாவில் அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளுக்கு மாற்று யோசனைகளை இணக்கபூர்வமான முறையில் முன்வைக்கப்போவதாக அண்மைக்காலமாக ஜனாதிபதி சிறிசேன கூறிவருகின்றார்.

பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கென்று  அமைக்கப்படவேண்டியிருக்கும் விசேட நீதிப்பொறிமுறையில் சர்வதேச சமூகத்தின் பங்கேற்பு என்பது எப்போதுமே மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.இது விடயத்தில் சர்வதேச பங்கேற்பு என்பது கலப்பு முறையிலான நீதிமன்றம் ஒன்றில் உள்நாட்டு நீதிபதிகளுடன் அருகருகாக சர்வதேச நீதிபதிகளும் அமர்ந்திருந்து விசாரணைசெய்து தீர்ப்பு வழங்கும் வகையிலானதாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே விளக்கமளித்திருக்கிறார்கள்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதுகாப்புப் படைகளுக்கு தண்டைனை வாங்கிக்கொடுக்கும் நோக்கில் நேர்மையற்ற முறையில் இலக்குவைப்பதாக அமைந்திருக்கிறது என்ற ஒரு எண்ணம் உருவாகியிருப்பதால், அந்தத் தீர்மானத்தைத் திருத்தியமைக்கவேண்டுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்த்தவிருக்கும் உரையில் இணக்கபூர்வமான முறையில் வலியுறுத்தப்போவதாக ஜனாதிபதி சிறிசேன கூறியிருக்கிறார்.

தனது யோசனைகளை ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுக்கும் புதிய  ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்செலெற்றுக்கும் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.அத்துடன் தனது யோசனைகள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதையும் பாதுகாப்பு படைகளின் பெருமைக்கு ஊறு விளைவிக்காத வகையில் அல்லது இலங்கையின் சுதந்திரத்தை ஆபத்துக்குள்ளாக்காத வகையிலும் நிவாரணத்தை வழங்குவதையும் இலக்காகக்கொண்டவை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 25) ஐ.நா.பொதுச்சபையில் அவர் உரையாற்றவிருக்கின்றார்.

அரசியல் முற்றுகை

பொருளாதாரத்தை மேம்படுத்தி பொதுமக்களுக்கு அதன் பலாபலன்கள் சென்றடையக்கூடியதாக செயற்படத் தவறியதற்காக மாத்திரமல்ல, வேறு பல காரணங்களினாலும் அரசாங்கம் இன்று அரசியல் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது.இரு வருட காலவரையறைக்குள் பொறுப்புக்கூறலுடனும் நிலைமாறுகால நீதியுடனும் தொடர்புபட்ட பல கருமங்களைச் செய்ய வலியுறுத்தும் 2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதும் இந்த முற்றுகை நிலைக்கான இன்னொரு காரணமாகும்.

இந்த ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதும் பணியில் அரசாங்கம் அதன் அணிகளுக்குள்ளேயே ஆதரவைப்பெறமுடியாமல் இருக்கிறது என்பது அது எதிர்நோக்குகின்ற சவாலின் கடுமையை தெளிவாக உணர்த்துகின்றது.காணாமல்போனோர் விவகார அலுவலகத்தை அமைப்பது உட்பட ஒவ்வொரு சீர்திருத்தமும் கடுமையான எதிர்ப்புக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.அதனால், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு நிலைமாறுகால நீதி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலுமொரு இருவருட காலஅவகாசத்தை 2017 மார்ச்சில் இலங்கை அரசாங்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டது ஒன்றும் அதிர்ச்சி தரத்தக்கதல்ல.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசாங்கம் அதில் கைச்சாத்திட்டபோது அதன் உள்ளடக்கங்கள் குறித்து அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாது எனாற போரின் இறுதிக்கால கட்டத்தில் இராணுவத்தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்தவாரம் கூறியிருந்தார்.தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து இன்று கூட அரசாங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் இல்லாமல் இருந்தால் அது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இத்தகைய சூழ்நிலையிலே, நிலைமாறுகால நீதிச் செயன்முறைகள் சிறியளவுக்கேனும் முன்னோக்கி நகர்திருக்கிறது என்றால் அதறகான பெருமை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ( வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தில் கைச்சாத்திட்ட ) தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட ஒரு சில அமைச்சர்களுக்குமே உரியதாகும்.சர்வதேச தராதரங்களை எட்டுவதற்கான தேவையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.தேசிய அரசியல் யதார்த்தங்களுக்கு   இந்த தராதரங்களை இசைவுபடுத்துவது எவ்வாறு என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

ஜெனீவா தீர்மானத்துக்கு இணங்க முதன் முதலாக நிறுவப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை காணாமல்போனோர் விவகார அலுவலகமேயாகும். அந்த அலுவலகம் கடந்தவாரம் அதன் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது.வலிமைவாய்ந்த சிபாரிசுகளுடன் கூடிய விரிவான ஒரு ஆவணமாக அந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

எந்தளவுக்கு அதை நடைமுறைப்படுத்த முடியும்; எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதே கேள்வியாகும்.சகல தடுப்புக்காவல் நிலையங்களினதும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களினதும் முழுமையான பட்டியல்கள் வெளியிடப்படவேண்டும் என்று விதப்புரை செய்திருக்கும் காணாமல்போனோர் விவகார அலுவலகம் அதிகாரமளிக்கப்படாத எந்தவொரு தடுப்புக்காவல் நிலையத்திலும் ஆட்கள் தடுத்துவைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது.

ஆனால், அந்த அலுவலகம் கையாளவேண்டிய அடிப்படைப் பிரச்சினையொன்று இருக்கிறது.கடந்த காலத்தைக் கிளறுவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் போரில் வெற்றியீட்டித் தந்தவர்களை நீதிமன்றத்தில் என்றாவது ஒரு நாள்  நிறுத்துவதற்கு வகைசெய்யக்கூடியதாக சான்றுகளைக் கண்டறிவதற்கான சூழ்ச்சித்தனமான பிரயத்தனமாகவே இலங்கை ஆயுதப்  படைகளும் பாதுகாப்புத் துறையும் பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்களும் நோக்குகிறார்கள் என்பதே அந்தப் பிரச்சினையாகும்.

எதிர்நிலையான இந்த நெருக்குதல்களுக்கு மத்தியிலும், அரசாங்கம் மெதுமெதுவாக என்றாலும் முன்னோக்கிச் செல்லவே முயற்சிக்கின்றது.நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் இரண்டாவதான இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.அத்துடன் சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு அந்த அலுவலகம் தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் சமமர்ப்பிக்கப்படவேண்டியிருக்கின்றன.

மூன்றாவது பொறிமுறையான உண்மை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பாக இப்போது பரிசீலிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலைமாறுகாலநீதி தொடர்பான விவகாரங்களில் இலங்கை அரசியல் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் பின்புலத்தில் முன்னோக்கி நகருவதற்கான வழிவகைகளைக் கண்டறிய மேலும் கூடுதலான காலமும் விவேகமும் அரசியல் துணிவாற்றலும் தேவைப்படுகின்றன.உலகின் வேறு பகுதிகளில் இத்தகைய செயன்முறைகள் கட்டவிழ பல தசாப்தங்கள் தேவைப்பட்டன.

ஆனால், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை போன்ற ஐ.நா.நிறுவனங்கள் அவற்றுக்கென சொந்த ஆணைகளையும் சுயாதிக்கத்தையும் கொண்டிருக்கின்றன என்பதை ஜனாதிபதி சிறிசேனவும் அரசாங்கமும் மனதிற்கொள்ளவேண்டியது முக்கியமானதாகும்.

இலங்கை தொடர்பிலான 2015 அக்டோபர் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஐ.நா. பொதுச்சபையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படவில்லை. உலகில் மிகவும் வல்லமைபொருந்திய நாடாக அமெரிக்கா இருக்கின்றபோதிலும் கூட, அதனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை செல்வாக்கின் கீழ் கொண்டுவர இயலாமல்போய்விட்டது. பேரவையைக் கண்டனம் செய்த அமெரிக்கா இறுதியில் அதன் உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொண்டது என்பதை நாம்விளங்கிக்கொள்ளவேண்டும்.

எனவே, சர்வதேச சமூகம் குறிப்பாக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆணையைக் கொண்ட பிரிவினர் சர்வதேச தராதரத்துடனான  பொறுப்புக்கூறலுக்கான தேவையை இலங்கையின் தராதரங்களுக்கு இசைவானமுறையில் தளர்த்துவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தத்தயாராயிருப்பர் என்று நம்புவது பொருத்தமானதல்ல.ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன.ஏனென்றால், அவை தமிழ் மக்களுக்கும் அவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஏற்புடையவையல்ல.

குற்றச்செயல் ஒன்றைச் செய்வதற்கு கடற்படை அதிகாரியொருவருக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியதாகக் கூறப்படுகின்ற விவகாரம் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால்( சி.ஐ.டி.) வேண்டப்படுகின்ற பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளின்  பிரதானி றியர் அட்மிரலல் ரவி விஜேகுணரத்ன சம்பந்தப்பட்ட விடயத்தில் ஜனாதிபதி அண்மையில் செய்த தலையீடுகள் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய முழு விவகாரமும் சர்வதேச நீதிச்செயன்முறைக்கு உட்ப்டதாக இருக்கவேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை முன்வைப்பதற்கு வழிவகுத்தன.நாட்டின் அதியுயர் அதிகாரபீடத்தில் உள்ளவரின் தலையீடு உரிமை மீறல்களனால் பாதிக்கப்பட்டவர்கள்  உள்நாட்டு நீதிச்செயன்முறையின் ஊடாக நீதியை எதிர்பார்க்கமுடியாது என்பதையே உணர்த்துகின்றது என்று கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ' த ஐலண்ட் ' ஆங்கிலப் பத்திரிகைக்குக் கூறியிருக்கிறார்.

எனவே , சமரசமுடைய சமுதாயமொன்றை நோக்கியதாக  இலங்கையை மாற்றியமைப்பதற்கு பின்பற்றப்படவேண்டிய நிலைமாறுகால நீதியில் உள்ள சிக்கலான அம்சங்களை அரசாங்கத்திற்குள் இருக்கின்ற தலைவர்கள் பலரும் முறையாக விளங்கிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

(கலாநிதி ஜெகான் பெரேரா)