நான்கு இளைஞர்களை இத்தாலி நாட்டிற்குள் கடத்துவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கூடிய இலங்கையர் ஒருவர் மிலானில் அமைந்துள்ள மல்பென்சா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பாக இத்தாலியில் இருந்து வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உடனடி விசாரணைகளை  நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு  அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மிலானில் அமைந்துள்ள இலங்கை கொன்சியூலேற் நாயகத்தின் அலுவலர்கள் கைதான நபரை சந்தித்து, அவரது அடையாளத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த கைதான நபர் தற்பொழுது வெளிநாட்டிலுள்ள இலங்கையின் எந்தவொரு தூதரகத்திலோ, அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலோ பணியாற்றும் நபரொருவரல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவர் வலிதான இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை கொண்டிருக்கவில்லை என்பதுடன், இலங்கையில் அரச நிறுவனமொன்றில் பணியாற்றும் தகைமையின் கீழ் அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடவுச்சீட்டிலேயே அவர் இத்தாலி நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். 

மேலும், குறித்த நபர் 2012 - 2015 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டில் இராஜதந்திர பணியொன்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றினை கொண்டிருந்ததுடன், அவரது ஒப்பந்தத்தின் நிறைவின் பேரில் குறித்த கடவுச்சீட்டு ரத்துச்செய்யப்பட்டிருந்தது.