அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்காக நீதி கிடைக்க வேண்டும் என கோரி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைதி போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.இதில் பௌத்த தேரர் உட்பட பலர் கலந்து கொண்டு கமர் நிசாம்தீனுக்கு நீதி கிடைக்க வேண்டும், கமர் நிசாம்தீனுடனான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.சென்தோமஸ் கல்லூரி மற்றும் கொழும்பிலுள்ள ஆசியன் சர்வதேச பாடசாலையின் பழைய மாணவரும் சிட்னி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது உயர் கல்வியைத் தொடர்பவருமான கமர் நிசாம்தீன் என்பவர் தீவிரவாத குற்றச்சாட்டில் அண்மையில் அவுஸ்திரேயாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் பேரிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுக் கொண்டவாறே அவுஸ்திரேலிய பொலிஸ் பிரிவின் உயர் மட்ட செயற்திட்டமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தருணத்திலேதான் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கணினி, இணைய பாதுகாப்பு கற்கைகளில் தேர்ச்சி மிக்க இவர் அவுஸ்திரேலிய பொலிஸ் பிரிவில் கண்காணிப்பு, கணினி பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் உருவாக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.   

சிட்னியில் பயங்கரவாத தாக்குதலொன்றை நடத்துவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய, கமருடையது என நம்பப்படும் குறிப்புப் புத்தகமொன்றை சக பணியாளர் கண்டெடுத்து பொலிசாரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.