(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இந்தியாவுக்கு பலாலி விமான நிலையத்தை கொடுத்து அபிவிருத்தி செய்யப்போவதில்லை என  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் உதவியைக்கொண்டே வடக்கின் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. மாறாக இந்தியாவுக்கு  பலாலி விமான நிலையத்தை  கொடுத்து அபிவிருத்தி செய்யப்போவதில்லை.

இவ்விடயம் தொடர்பில் பிரதமரும் நானும் தீர்மானம் எடுத்துவிட்டோம் எனவும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே பலாலி விமான நிலைய அபிவிருத்தியை இலங்கை விமானப்படைக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வானூர்தி மூலம் ஏற்றிச்செல்ல சட்டமூலம் மற்றும் குடியியல் வான்செலவு சட்ட விவாதத்தின் போது பொது எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகளை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது, பலாலியை இந்தியாவுக்கு வழங்கவுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறுகையில், அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பொய்யாக காரணிகளை கூறி காலத்தை கடத்த வேண்டாம் எனக் கூறினார்.