(ஆர்.விதுஷா ) 

மஹரகம பகுதியின்  ருவாவெல புரான விகாரைக்கு அருகாமையில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி  நபர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான சம்பவத்தின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலையினை திட்மிட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , அவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த 7 ஆம் திகதி  குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது. கொலையினை திட்டமிட்ட இருவரை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து நுகேகொட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதற்கு அமைவாக சந்தேக நபர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்மடுல்ல பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபர்கள் நால்வரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் கடவத்த மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் 24 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

மிரிஹான விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.