30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

மகாவலியின் வரலாறு 70 வருடங்களுக்கும் மேற்பட்டதாகும். 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மகாவலி நீரை வடக்கிற்கு திருப்புவதற்கு பொல்கொல்லை அணைக்கட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து மகாவலி திட்டத்தில் மற்றுமொரு அடி முன் எடுத்துவைக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி மகாவலி நீர் கண்டி, பொல்கொல்லை அணையினூடாக அனுராதபுரம், பொலன்னறுவை பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை மகாவலி வரலாற்றில் புதிய பக்கமொன்று திறந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பமாகும்.

குறித்த பணி ஆரம்பிக்கப்பட்ட போது முக்கிய அரசியல்வாதியாக இருந்தவர் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் சீ.பீ.டி.சில்வா ஆவார். அதேபோன்று அனுராதபுரத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மைத்ரிபால சேனாநாயக்கவும் மகாவலி அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றினார்.

1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் அமைச்சர் காமினி திசாநாயக்க துரித மகாவலி திட்டத்தை ஆரம்பித்து மகாவலி அபிவிருத்தி வரலாற்றில் புரட்சிகரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இதன் மூலம் நாட்டில் விவசாயத்துறை அபிவிருத்தியடைந்தது. பொருளாதாரம் பலம் பெற்றது. மின்சார உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டன. தொழிற்துறைகளில் புத்தெழுச்சியொன்று உருவானது. 1986ஆம் ஆண்டு அமைச்சர் காமினி திசாநாயக்கவின் தலைமையில் இந்த அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட புத்தெழுச்சியுடன் சேர்ந்ததாக மகாவலி விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. ஓரிரு வருடங்கள் மட்டுமே இந்த மகாவலி விளையாட்டு விழா நடைபெறவில்லை என நான் நினைக்கிறேன். 

எமது நாட்டின் மூன்றில் ஒரு நிலப்பிரதேசம் இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமானதாகும். மகாவலி விவசாயம், பெருந்தோட்டம், மீன்பிடி கைத்தொழில், மின்சார உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விரிவான பங்களிப்பை வழங்கி வருகிறது.

இதேபோன்று மகாவலி அதிகார சபை, மகாவலி வலயங்களில் வாழும் விவசாய சமூகத்தின் பிள்ளைகளின் விளையாட்டு திறன்கள், கலாசார திறன்களை மேம்படுத்துவதற்கான தளமொன்றை உருவாக்கி கொடுத்துள்ளது. கலாசார துறையில் கலைஞர்களிடமிருந்து மகாவலி வலயங்களிலுள்ள பிள்ளைகளின் கலாசார திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கு கிடைக்கும் ஒத்துழைப்பு அவர்களுக்கு பெரும் பலமாகும். கலாசாரத் துறையில் சிரேஷ்ட கலைஞரான சதிஸ்சந்திர எதிரிசிங்க என்ற கலைஞர் இந்த நிகழ்வில் பங்குபற்றுகின்றார்.

இந்த 30 வருட காலப்பகுதியில் மகாவலி விளையாட்டுத் துறையின் மூலம் சர்வதேச மட்டத்திலான விளையாட்டு வீர, வீராங்கனைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். அந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளும் எமது அழைப்பையேற்று இன்று இங்கு வருகை தந்திருக்கின்றனர். அவர்களது வருகை எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. 

மகாவிலியின் மூலம் இந்த நாட்டில் புதியதொரு மகாவலி பண்பாடு உருவாகியுள்ளது. ரஜரட்டையை போன்று நான்கு மாகாணங்களுக்கும் நீரை வழங்கும் மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கம் எமது நீர்ப்பாசன துறையில் பாரியதொரு உருவாக்கமாகும். மகாவலி பொறியியற் துறையில் விசேட திறமைகளைப்பெற்ற திறமைசாலிகள் பலர் உள்ளனர்.

இதன் ஆரம்ப சாத்திய வள ஆய்வு முதல் சிரேஷ்ட பொறியியலாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள், மேன்நிலை நிர்வாகிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் கௌரவத்துடன் நாம் நினைவுகூர வேண்டும்.

மகாவலி இயக்கம் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பாக உற்பத்தி செயன்முறைகளில் தொழிற்துறை அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்பின் காரணமாக எமது எதிர்காலம் பற்றிய நல்ல எதிர்பார்ப்பை வைக்கமுடியும்.

கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் நாம் விவசாயத்துறையில் தெளிவானதொரு முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றோம். விவசாயத்துறை அமைச்சரும் இது பற்றி இங்கு குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசாங்கமும் விவசாயத்துறைக்கு வழங்காத பல சேவைகளை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். இந்த நாட்டில் ஆரம்ப கால அரசர்களின் காலப்பகுதியிலும் கூட பலமான அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதற்கு அடிப்படையாக அமைந்தது விவசாயத்துறையேயாகும்.

விவசாயத்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடு என்ற வகையில் நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துகின்றபோது முக்கியமாக விவசாயத்துறையில் நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். அரச கொள்கையின் படி விவசாயம், நீர்ப்பாசனம், மகாவலி விலங்கு வேளாண்மை போன்ற அமைச்சுக்கள், நிறுவனங்கள், தனியார்துறை இணைந்து விசாயத்துறையை மேம்படுத்துவதற்காக விரிவான செயற்திட்டமொன்றை கடந்த சில தசாப்தங்களாக மேற்கொண்டு வருகின்றன. 

30ஆவது முறையாக இடம்பெறும் இந்த மகாவலி விளையாட்டு விழாவையும் சேர்த்து இதுபோன்ற 18 விழாக்களில் அமைச்சராக பங்குபற்ற கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எமது விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்கு நாம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். வரட்சி, வெள்ளம் போன்ற காலநிலை மாற்றங்கள் எமது நாட்டுக்கு மட்டுமானதல்ல. அவை இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சவாலாக மாறியுள்ளன. இவை அனைத்துக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டும்.

மனித பரிணாமத்தின் ஆரம்பம் முதல் மனிதன் இயற்கையின் சவால்களை வெற்றிகொண்டு முன்னேறியிருக்கிறான். இந்த சாவல்களுக்கு முகங்கொடுத்து அவர்கள் மேன்மேலும் பலமடைந்து இருக்கிறார்கள்.

பெரும்பாலான உற்பத்திகளை மேற்கொள்ளவும் உற்பத்தி செயன்முறைகளில் ஈடுபடவும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முடிந்துள்ளன. எப்போதும் இல்லாத வகையில் இன்று காலநிலை மாற்றம் உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும் அபிவிருத்திக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்மைப்போன்ற சிறியதொரு நாட்டுக்கு இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக அனுபவங்கள் கிடைப்பதைப் போன்று எதிர்காலத்திலும் இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். இந்த அனைத்து சாவல்களையும் வெற்றிகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.

தமது பிள்ளைகளை விளையாட்டுத் துறையில் இணைத்துக்கொள்வதற்கு விரிவான பங்களிப்பை வழங்கும் வியர்வை, கண்ணீர், மூச்சு என்பவற்றைளும் சேர்த்து நாட்டின் அபிவிருத்தி உற்பத்தி செயன்முறைகளுக்கு விசேட பங்களிப்பை வழங்கும் எமது அன்பிற்குரிய விவசாய சமூகத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பக்கபலமாக இருந்த தொழிநுட்ப சேவையிலுள்ள பொறியியலாளர்கள், அந்தந்த நிறுனங்களின் நிருவாகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

மகாவலி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, புதிய பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களுக்கும் மகாவலி வலயங்களின் வதிவிட திட்ட முகாமையாளர்கள், தொகுதி முகாமையாளர்கள், கள அலுவலர்கள், விளையாட்டுத் துறை அலுவலர்கள், விளையாட்டு ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். 

அரசாங்கம் என்ற வகையிலும் பிரஜைகள் என்ற வகையிலும் செய்ய வேண்டிய முதலீடுகளில் முக்கியமாக இருப்பது பிள்ளைகளுக்காக செய்யப்படும் முதலீடாகும். ஒரு நாட்டில் பலமான சமூகமொன்று உருவாக வேண்டுமானால் ஆரோக்கியமான  சமூகமொன்று இருக்க வேண்டும்.

இலவச சுகாதாரத்துறையைப் போன்று இலவச கல்விக்கு செய்யப்படும் விரிவான முதலீட்டில் குறித்து தான் எதிர்காலத்தில் மிகவும் எதிர்பார்ப்பு வைக்க கூடியதாக இருக்கும். எனவே அவ்வனைத்து துறைகளையும் விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் என்ற வகையில் நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

விளையாட்டு வீர, வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ஆலோசகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் ஏனைய துறையிலுள்ள அதிகாரிகளுக்கும் இந்த 30ஆவது மகாவலி விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு வழங்கிய பங்களிப்பகளுக்கு விசேட நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த விளையாட்டு விழாவில் திறமையான வீர, வீராங்கனைகளுக்கு மகாவலி காணிகளை பெற்றுக்கொடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். மேலும் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்படும் பாடசாலைக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அதேபோன்று குறித்த விளையாட்டு வீர, வீராங்கனைகளில் சிறந்த திறமைகளை வெளிக்காட்டும் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களை வழங்கவும் தீர்மானித்துள்ளோம். ஆசிய வலைப்பந்து போட்டியில் எமது நாட்டுக்கு விசேட வெற்றியைத் பெற்றுத் தந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் எமது நாட்டுக்கும் தேசத்திற்கும் உயர்ந்த கௌரவத்தை பெற்று தந்திருக்கின்றனர்.

எமது அழைப்பையேற்று அவர்களும் இங்கு வருகை தந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எமது கோரிக்கையின் பேரில் அவர்களது எதிர்காலம் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்க டயலொக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.