மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பகுதியில் யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வளர்ப்புத் தந்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பகுதியில் யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் வளர்ப்புத் தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.09.2018) மாலை காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வளர்ப்புத்தந்தையான சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை (17.09.2018) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றமேலதிக நீதவான் கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 01.01.2018ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சிப் பகுதியைந் சேர்ந்த 17 வயதுடைய யுவதியே இவ்வாறு அவரின் வளர்ப்புத் தந்தையினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியின் தாய் ஏற்கனவே செய்த திருமணத்தில் ஆறு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் இன்னுமொரு திருமணம் செய்து ஒரே வீட்டில்  இந்த ஆறுபிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் குறித்த வளர்ப்புத் தந்தையாக இருந்தவர் வளர்ப்பு மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தனது மனைவியின் மகளை பராமரித்து வந்த வளர்ப்புத் தந்தை குறித்த பிள்ளையை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நிலையில் இந்த சம்பவத்தை தனது சகோதரரிடத்தில் கூறியுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்குள்ளான தனது சகோதரியை அழைத்துக் கொண்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை (16.09.2018) மாலை முறைப்பாடு ஒன்றை சகோதரன் செய்துள்ளார்.

இதனை விசாரணை செய்த காத்தான்குடி பொலிசார்  அந்த யுவதியின் வளர்ப்புத்தந்தையை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட வளர்ப்புத் தந்தை 48 வயதுடையர் என தெரிய வருகின்றது. இந்த யுவதி ஒரு ஆடை தயாரிப்பு நிலையத்தில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

குறித்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.