எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தீர்மானத்தை இதுவ‍ரை எடுக்கவில்லை என  தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், சொந்த தொழில் சார்ந்த விடயங்களில் முழு நேரம் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

நான் கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை சீராக முன்னெடுத்ததுடன் அதற்கான நிதி மூலங்கள் பல்வேறு வழிகளிலும் பெற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் தற்போது அபிவிருத்தி என்பது வெறும் பூச்சியமாகவே உள்ளது.

ஒருபக்கம் அபிவிருத்தியை முன்னெடுத்த அதேவேளை மறுபக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டு செல்ல முடிந்தது. 

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கல்குடாவின் மாகாணசபை பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட ஒன்றிணைந்து பணியாற்றவும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கான பல்வேறு வழிகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றேன்.

ஏறாவூரில் அமையப்பெற்ற தொழிற்சாலையைப் போன்று இப் பிரதேச யுவதிகளின் வேலையில்லா பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் தொழிற்சாலைகளை எதிர்காலத்தில் உருவாக்க திட்டுமிட்டுள்ளேன் என்றார்.