புத்தளம் - குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் நேற்றைய  தினம் மாலை பாடசாலை விட்டு வீடு செல்லும் போது  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை நிறைவடைந்த நிலையில் 3 மாணவிகள் பேருந்தில் சென்று இறங்கி பாதை ஓரமாக நடந்து சென்றபோது குறித்த வீதியால் சென்ற  ஜீப் வண்டி மாணவி மீது மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த மாணவி உடனடியாக புத்தளம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் மற்றைய இரு மாணவிகளுக்கும் காயம் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளபோதும் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்த மாணவி கொட்டுக்கச்சி நவோயா மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய மகாநாயக்க முதியான்சலாகே துனீஷா ஓஷந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

விபத்திற்கு காரணமான ஜீப் வண்டி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி 21 வயதானவர் என்றும், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.