பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் குறைந்த இன்னிங்சில் 2000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

14 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரண்டவாது போட்டியில் பாகிஸ்தான் - ஹொங்கொங் அணிகள் மோதின. 

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 116 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பின்னர் 117 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவர் 27 ஓட்டங்களைப் பெறும் போது ஒருநாள் போட்டியில் 2000 ஓட்டங்களை தொட்டார். இந்த ஓட்டங்களை எடுக்க 47 ஒருநாள் போட்டியில் 45 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது அவருக்கு.

இதன்மூலம் விரைவாக இரண்டாயிரம் ஓட்டங்களைப்பெற்ற 2 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா 40 இன்னிங்சில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார்.

23 வயதாகும் பாபர் அசாம் 47 ஒருநாள் போட்டியில் 45 இன்னிங்சில் களம் இறங்கி 8 சதம், 7 அரைசதங்களுடன் 2006 ஓட்டங்களை சேர்த்துள்ளார். இவரது சராசரி 54.21 என்பது குறிப்பிடத்தக்கது.