தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கதையின் நாயகனாக உயர்ந்தவர்களின் பட்டியலில் புதிதாக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாம் அண்டன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘கூர்கா ’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் யோகி பாபு. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை அவரது நண்பரும் முன்னணி நாயகனுமான சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இதில் யோகி பாபு மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். அவருடன் ஒரு நாயும் இடம்பிடித்திருக்கிறது. 

இது குறித்து இயக்குநரிடம் கேட்டபோது,‘இந்த படத்தில் ஒரு நாய், ஒரு வெளிநாட்டினர் மற்றும் அவரது வீட்டில் காவலுக்கு பணியாற்றும் கூர்கா ஒருவர் என மூவரும் ஒரு புள்ளியில் பணயக்கைதியாகி விடுகிறார்கள். 

இதன் பின்னணி என்ன? அதன் தொடர்ச்சி என்ன? என்பதை நகைச்சுவையுடன் கூடிய திரில்லராக உருவாக்கியிருக்கிறோம்.’ என்றார்.

ஆக தற்போதைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூரி சிக்ஸ் பேக்குடன் எக்சன் ஹீரோவாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட, யோகி பாபுவோ தன்னுடைய உடல் மொழியில் தனக்கேற்ற கதையில் நாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.