இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாகவும், ஒவ்வொரு வருடமும் 4 இலட்சம் பெண்கள் கர்ப்பம் தரிப்பதாகவும் அதில் 140 குழந்தைகள் பிறக்கும் போதே இறந்து பிறப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இடம்பெற்றுவரும் பெண்கள் வாரத்தின் மூன்றாவது நாளில் பெண்களின் உளவியல் சுகாதாரத்தின் அவசியம் எனும் தொனிப்பொருளின்கீழ் விசேட செயலமர்வொன்று கொழுமில் அமைந்துள்ள குடும்ப சுகாதார பணியகத்தில் இன்று இடம்பெற்றது.  குறித்த செயலமர்வில் பெண்களின் உளவியல் சார் மருத்துவத்தில் விசேட நிபுனத்துவம் மிக்க வைத்தியர்கள் மற்றும் பெண்கள் வன்முறையை இல்லாதொழிப்பதற்காக செயற்படும் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். 

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா,

பெண்களை பாதுகாப்பதற்கான உளவியல்சார் மருத்துவ செயற்பாடுகள் மீது அவசியம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆதாவது பெண்கள் வன்முறையில் அவர்களுக்கான புற தாக்கங்களை விட உளவியல் சார் பாதிப்புக்கள் அதிகமாக ஏற்படுகின்றமை பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டள்ளது. ஆனால் குறித்த விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை.

தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்குள்ளாகின்றனர். வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதோடு, ஒவ்வொரு வருடமும் 4 இலட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர் அதில் 140 குழந்தைகள் பிறக்கும் போதே இறந்து பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதே போல், வருடமொன்றுக்கு  ஒரு இலட்சத்து 80 ஆயிரம்  குழந்தைகள் பிறக்கின்றனர் ஒவ்வொரு வருடமும் 24 ஆயிரம்  சிறுவயது கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்யப்படுகின்றார்கள். மேலும் 2013 ஆண்டில் மட்டும் ஐம்பது கர்ப்பிணி தாய்மார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது பாரதூரமான பெண்களின் நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு உளவியல் சுகாதாரத்தின் அவசியம், தொழில்புரியும் இடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முறைமைகள் பெற்றொர் பிள்ளைகளுக்கிடையிலான உறவுமுறைகளில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் போன்றவற்றை மையப்படுத்தி பல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இந்தவகையில் கர்ப்பிணி தாய்மார்களின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் எதிர்காலத்தில் நாட்டின் 22 மருத்துவமனைகளில் 'மிதுரு பியச' என்ற பெயரில் சேவை மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.