ஹொங்கொங் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 117 என்ற இலகுவான வெற்றியிலக்கை எளிதாக கடந்தது.

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியான பாகிஸ்தான் மற்றும் ஹொங்கோங் அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கோங் அணியின்  தலைவர் அனுஸ்மன் ராத் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளத் தெரியாமல் 37.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

117 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான இமாம்-உல்-ஹக் மற்றும் பகர் சமான் ஆகியோர் பொறுமையாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கை மெதுவாக அதிகரித்தனர்.

இருப்பினும் இந்த ஜோடி 41 ஓட்டங்களை பெற்றிருந்தபோது 8.1 ஆவது ஓவரில் பகர் சமான் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்ததாக பாபர் ஆசாம் களமிங்கி இமாமுடன் இணைந்து ஆடி வந்தார்.

இருவருமாக இணைந்து 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது பாபர் ஆசாம் இஷான் கானுடைய பந்து வீச்சில் 33 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அதனால் பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாபர் ஆசாமின் வெளியேற்றத்தை தொடர்ந்து மலிக் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர, ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கிய இமாம் 69 பந்தில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் 50 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இதையடுத்து மலிக் நான்கு ஓட்டத்தை விளாச பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 120 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

பந்து வீச்சில் ஹொங்கோங் அணி சார்பாக இஷான் கான் 8 ஓவர்களுக்கு 34 ஓட்டங்கள‍ை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பகிஸ்தான் அணி சார்பில் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய உஷ்மான் கான் தெரிவுசெய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின், அபுதாபியில் நாளை மாலை இலங்கை நேரப்படி 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.