இலங்கைக்கு எதிரான முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இறுதி நேரத்தில் மீண்டும் களமிறங்கிய தமிம் இக்பால் ஒரு கையை மாத்திரம் பயன்படுத்தி துடுப்பெடுத்தாடியமையினால் அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாயில் ஆரம்பானது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது.

இப் போட்டியின் போது நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி தமிம் இக்பால் லிட்டான் தாஸ் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களாக களமிறங்கினர்.

இதன்போது சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் இரண்டு ஓடத்துடன் ஆட்டத்தை இடை நடுவில் நிறுத்திக் கொண்டு வெளியேறினார்.

இதையடுத்து போட்டியின் இறுதித் தருணங்களில் பங்களாதேஷ் அணியின் 9 ஆவது விக்கெட்டும் வீழ்த்தப்பட உபாதை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்ட தமிம் இக்பால் மீண்டும் களம்புகுந்து ரஹிமுடன் இணைந்து ஒரு கையால் மாத்திரம் பந்துகளை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடினார்.

இவரது பங்களிப்பு ரஹிமுக்கு இறுதித் தருணங்களில் மேலும் வலு சேர்த்தது. 

இந் நிலையில் நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மத்திரம் துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர். 

அத்துடன் வைத்தியர்கள் இவரை குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமையினால் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இழந்து இவர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.