கழுகொன்றைப் பிடித்து உயிருடன் சித்திரவதைசெய்து கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இரு சந்தேக நபர்களை ஹபராதுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கழுகொன்றை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்வது அதனை தோலுரித்தது மட்டுமன்றி கால்கள் துண்டாக்கப்பட்டு கழுத்தில் கத்தியை வைத்த நிலையில் சமூகவலைத் தளங்களில் கடந்த சில தினங்களாக  புகைப்படங்கள் பரவிவந்தன.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஹபராதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் 42 மற்றும் 46 வயது மதிக்கத்தக்க அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அதனை உணவுக்காக பயன்படுத்தவே இவ்வாறு செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகத்தினடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வன ஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.