இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் சோகத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. 

தனது கண்ணெதிரிலேயே காதல் கணவரை பறிகொடுத்த கர்ப்பிணியான அம்ருதா தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ப்ரனாய்- அம்ருதா ஆகிய  இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளிப் படிப்பை முடித்த ப்ரனாய் தொழில் நுட்ப அறிவியல் படித்துள்ளார். அம்ருதா ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் இளங்கலை படித்துள்ளார்.

பல வருடங்களாக இருந்த காதல் உறவு, 2017ம் ஆண்டு அம்ருதாவின் வீட்டிற்கு தெரிந்ததையடுத்து,  6 மாதத்திற்கு மேலாக வீட்டிலேயே  சிறைப்பிடிக்கப்பட்டாள்.

இறுதியில், வீட்டை விட்டு வெளியேறி, ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜியத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருமணம் ஆன கையோடு வெளிநாடு செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அம்ருதா கர்ப்பமானதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.

கர்ப்பம் தரித்த பிறகு நலகொண்டாவில் உள்ள வைத்தியசாலையில்தான் பரிசோதனைக்காக வந்து சென்றிருக்கிறார்கள்.

அப்படியொரு நாள் பரிசோதனைக்காக வந்த போதுதான் இந்தக் கொடூர கொலை நடந்திருக்கிறது.

"என்னுடைய சொல்படி கேட்கவில்லை என்றால் ப்ரனாய்யை கொன்றுவிடுவேன்" என்று எனது தந்தை என்னிடம் கூறியதாகவும், ப்ரனாய்யை தனது தந்தைதான் கொலை செய்திருப்பார் என்றும் அம்ருதா கூறியுள்ளார்.