பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது சொற்ப நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்து 137 ஒட்டங்களினால் படுதோல்வியைத் தழுவியது.

டுபாயில் இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் பங்களாதேஷ் அணி ரஹிமின் துணையுடன் 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் சார்பாக அதிரடியாக ஆடி வந்த ரஹிம் 150 பந்துகளுக்க 11 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 144 ஓட்டங்களை எடுத்தார்.

262 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக உபுல் தரங்க  மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்தில் உபுல் தரங் அதிரடியாக துடுப்பெடுத்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இருப்பினும் குசல் மெண்டீஸ் 1.6 ஆவது ஓவரில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எதுவித ஓட்டத்தையும் பெறாது கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை மந்தகதியானது. 

குசல் மெண்டீஸையடுத்து உபுல் தரங்கவும் மோர்டசாவினுடைய பந்து வீச்சில் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது.

அதன்படி தனஞ்சய டிசில்வா டக்கவுட் முறையிலும் குசல் பெரேரா 11 ஓட்டங்களுடனும் தசூன் சானக்க 7 ஓட்டத்துடனும், அணித் தலைவர் மெத்தியூஸ் 16 ஓட்டங்களுடனும் திஸர பெரோ 6 ஓட்டத்துடனும ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 18.5 ஓவர்களுக்கு ஏழு விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

அதையடுத்து சுரங்க லக்மாலும் தில்றூவான் பெரேராவும் சற்று நிதானமாக ஆட நினைத்தாலும் முஸ்தபிஸுர் அவர்களை விட்டு வைக்கவில்லை. அதன்படி இலங்கை அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை, முஸ்தபிஸுரின் பந்து வீச்சில் சுரங்க லக்மால் 20 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அபோன்சோவுடன் இணைந்து தில்றூவான் பெரேரா ஆடி வர இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது. அதனையடுத்து 34.1 ஓவர்களுக்கு அணியின் ஓட்ட எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது தில்றூவான் பெரேரா 29 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து அபோன்சோவும் ஆட்டமிழக்க இலங்கை அணி 35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதனால் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மோர்தசா, ரஹுமான், ஹசான் ஆகியோர் தலா  இரண்டு விக்கெட்டுக்களையும் ஹசன், ரபெல் ஹுசேன்  மற்றும் மொசாடெக்  ஹுசேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரரும் அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய வீரருமாக ரஹும் தெரிவானார்.

நாளை இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கோங் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தகக்கது.